ECONOMYPENDIDIKANSELANGOR

எட்டு மாணவர்களுக்கு மடிக்கணினி- யாயாசான் சிலாங்கூர் வழங்கியது

ஷா ஆலம், ஏப் 29- யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் ஏற்பாட்டு ஆதரவில் மலேசிய உத்தாரா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் எட்டு மாணவர்களுக்கு அந்த அறவாரியம் மடிக்கணினிகளை வழங்கியது.

அம்மாணவர்கள்  தங்கள் பாடங்களை தொடர்பதற்கும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பங்கு கொள்வதற்கும் ஏதுவாக இந்த மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக அந்த அறவாரியத்தின் கல்விப் பிரிவு தலைமை நிர்வாகி ஸஹூரா ஜக்ரி கூறினார்.

கணினிகள் இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடர்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உதவியை வழங்கியுள்ளோம். இந்த மடிக்கணினிகளை வழங்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்பதோடு எதிர்காலத்தில் இதனை மேலும் விரிவான அளவில் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்றார் அவர்.

யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது அமைப்புகளுடன் கல்வி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, மடிக்கணினி தமக்கு வழங்கப்பட்டது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக அந்த உபகரணத்தை  பெற்ற மாணவர்களில் ஒருவரான கே.கவிலன் (வயது 22) கூறினார்.

தனது  சகோரரரின் மடிக்கணினியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இனியும் இருக்காது என்று அனைத்துலக விவகாரங்களுக்கான துறையில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் அம்மாணவர்  தெரிவித்தார்.

மடிக்கணினி இல்லாத காரணத்தால் இயங்கலை வாயிலாக நடைபெறும் பாடங்களை கற்றுக் கொள்வதில் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் இனி அந்த பிரச்னை இருக்காது என்றும் அவர் கூறினார்.

மடிக்கணினியை வழங்கிய யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண் பெற்று சிறந்த மாணவராக விளங்குவேன் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.

 


Pengarang :