ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் பி.கே.பி.பி. விதிமுறையை திருத்தும் பரிந்துரையில் மூன்று அம்சங்கள் அளவு கோளாக கொள்ளப்படும்

ரவாங், ஏப் 30– சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையில் (பி.கே.பி.பி.)  திருத்தம் செய்வது தொடர்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரையில் மூன்று அம்சங்கள் அளவு கோளாகக் கொள்ளப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வு, மக்கள் கூடும் இடங்களுடன் நோய்த் தொற்றுக்கு உள்ள தொடர்பு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது ஆகியவையே அந்த மூன்று அளவு கோள்களாகும் என்று அவர் சொன்னார்.

நாங்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். திடீரென அல்லாமல் பொருத்தமான நேரத்தில்  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில்  மாற்றம் செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.

ஆகவே புதிய நிபந்தனையின் அமலாக்கத்திற்கான தேதியை நாங்கள்  பரிந்துரைத்துள்ளோம். இந்த பரிந்துரை கூட்டரசு நிலையில் விவாதிக்கப்பட்டு 198ஆம் ஆண்டு (சட்டம் 342) தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர்  சொன்னார்.

இங்குள்ள லீ கார்டன்ஸ் பெவிலியனில் செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 2030 ஆம் ஆண்டு வரையிலான திட்டமிடல்  நகலின் விளம்பர மற்றும் மக்கள் பங்கேற்பு நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் மத்திய அரசு இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், அந்த அறிவிப்பின் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவர்களைத் தாம் சந்திக்கவுள்ளதாக சொன்னார்.


Pengarang :