ECONOMYNATIONALPENDIDIKAN

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மூடப்படும் பள்ளிகள் பெயரை பகிரங்கப்படுத்துவீர்- சித்தி மரியா கோரிக்கை

ஷா ஆலம், மே 1- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மூடப்படும் பள்ளிகளின் பெயரை பகிரங்கப்படுத்தும்படி  சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு இந்நடவடிக்கை துணை புரியும் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 சம்பவங்கள் தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளை மட்டுமே வெளியிடும் மத்திய அரசின் அணுகுமுறைக்கு  எதிரான கருத்தை தாம் எப்போதும் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 

கோவிட்-19 நோயாளிகள் பற்றிய இரகசியம் காக்கப்படுவதற்காக அவர்களின் பெயர் மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்கள் பகிரப்படுவதில்லை என்று அரசாங்கம் காரணம் கூறுகிறது.

ஆனால், மூடப்படும் பள்ளிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படாததால் போலியான செய்திகள் வாட்ஆப் புலனங்களில் வெளிவருவதற்கு காரணமாக அமைந்து விடுவதாக அவர் சொன்னார்.

‘சிலாங்கூரில் கோவிட்-19- எதையும் கேளுங்கள்‘ எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-29 நோய்த் தொற்று குறித்த தகவல்களை அறிந்திருக்கும் பட்சத்தில் பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை, பேரங்காடி, பள்ளி போன்ற மக்கள் கூடும் இடங்களை தவிர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று சித்தி மரியா குறிப்பிட்டார்.

பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக மத்திய அரசு இத்தகைய தகவல்களை மூடி மறைக்கலாம். இருப்பினும் என்னைப் பொறுத்தவரை  நோய்ப் பரவல் உள்ள இடங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் முழுமையாக தெரிந்திருப்பது அவசியம் என்றார் அவர்.

 


Pengarang :