MEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலமில் ஜூன் 5ஆம் தேதி பி.கே.ஆர். கட்சி மாநாடு  நடைபெறும்

பெட்டாலிங் ஜெயா, மே 3– கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (பி.கே.ஆர்.) 15வது தேசிய மாநாடு  வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறும்.

“மக்கள் மேடை” எனும் கருப்பொருளிலான இந்த மாநாடு இயங்கலை வாயிலாகவும் பேராளர்களின் நேரடி பங்கேற்பின் வழியும் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

கோவிட்-19 நோய் தடுப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றமும் சங்கங்களின் பதிவதிகாரியும் நிர்ணயித்த  எஸ்.ஒ.பி. விதிமுறைகளின்படி இம்மாநாடு இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாடுகள் ஜூன் 5ஆம் தேதியும் கட்சியின் தேசிய பேரவை ஜூன் 6ஆம் தேதியும் நடைபெறும் என்றார் அவர்.

சபா மற்றும் சரவா தவிர்த்து நாட்டின் இதர மாநிலங்களில் உள்ள 152 கிளைகளைச் சேர்ந்த சுமார் 1,000 பேராளர்கள் இம்மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வர். சபா மற்றும் சரவா பேராளர்கள் ஸூம் செயலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்பர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் மாதம் 5ஆம் தேதி  மாலையில் நடைபெறும் தேசியத் தலைவரின் கொள்கையுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறிய அவர், அதனைத் தொடர்ந்து  பேராளர்களின் விவாதங்களும் மாநாட்டை முடித்து வைத்து தலைவர்கள் ஆற்றும் உரையும் இடம் பெறும் என்றார்.

இம்முறை மாநாட்டிற்கு அந்நிய நாட்டு அரச தந்திரிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் வழக்கம் போல் ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

முந்தைய மாநாடுகளில் நிகழ்ந்ததைப் போல் விரும்பத்தகாத சம்பவங்கள் இம்முறை நிகழாது என வாக்குறுதியளித்த சைபுடின், அனைத்து தொகுதி மாநாடுகளும் மிகவும் அமைதியான முறையில் நடந்ததது இதற்கு சான்றாக அமைகிறது என்றார்.

கட்சியின் தேர்தல் இம்முறை நடைபெறாது என்றும் அடுத்த 18 மாதங்களில் நடைபெறும் வகையில் அது ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :