ECONOMYHEALTHNATIONAL

மக்கள் ஆதரவின் எதிரொலி- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூத் திட்டம் விரிவாக்கப்படும்

புத்ராஜெயா, மே 3- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசித் திட்டம் தொடரப்படும் என்பதோடு அது தொடர்ந்து சுய விருப்பத்தின் அடிப்படையிலான திட்டமாக இருக்கும்.

மொத்தம் 268,000 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவு மூன்று மணி நேரங்களுக்கும் கூடுதலான நேரத்தில் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அத்திட்டத்தை விரிவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த இரண்டாவது திட்டத்தில் இணைய வசதி இல்லாத காரணத்தால் தடுப்பூசி பெறுவதில் நியாயமான பங்கு கிடைக்காதவர்கள் கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என்று கோவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அஸ்ட்ராஸேனேகா எதிர்காலத் திட்டத்தின் கீழ் சுய விருப்பத்தின் அடிப்படையில் வழங்குவதற்காக நாங்கள் சமூக மருத்துவ மையங்களை அணுகவிருக்கிறோம் என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 11 லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகள் கோவாக்ஸ் உற்பத்தி மையத்திலிருந்து வந்து சேரும். வரும் ஜூன் மாதம் 610,000 தடுப்பூசிகளும் ஜூலை மாதம் 410,000 தடுப்பூசிகளும் பெறப்படும். ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியை ஏற்றுக் கொள்வதில்லை என்ற சரவா மாநிலத்தின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட போது, அந்த தடுப்பூசிக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு மற்றும் அதன் மீதான நம்பிக்கையை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு தனது முடிவை மறுஆய்வு செய்யும் என நம்புவதாக கைரி கூறினார்.


Pengarang :