ANTARABANGSANATIONAL

வர்த்தக குற்றங்கள் தொடர்பில்  203 வியாபாரிகளுக்கு வெ. 30,000  அபராதம்

கெமாமான், மே 8- பல்வேறு வர்த்தக குற்றங்கள் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள 203 வர்த்தகர்களுக்கு 30,050 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டார் விவகாரத்துறை துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

விலைப்பட்டியல் வைக்காத காரணத்திற்காக 90 வணிகர்களும் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை கொண்டிராத குற்றத்திற்காக 60 வணிகர்களும் உச்ச வரம்பு விலையை விட  கூடுதல் விலையில் பொருள்களை விற்றதற்காக 53 வணிகர்களும் குற்றப்பதிவுகளைப் பெற்றதாக அவர் சொன்னார்.

2021ஆம் ஆண்டிற்கான  விழாக்கால உச்சவரம்பு விலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடுழுவதும் 561 மொத்த வியாபார மற்றும் 28,609 சில்லரை வியாபார மையங்கள் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

பொருள்களின் விலை திடீர் உயர்வு காணும் பட்சத்தில் இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோழி மற்றும் இறைச்சி மட்டுமின்றி அனைத்து விதமான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :