NATIONAL

35.2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மலேசியா இம்மாதம் பெறும்

சிரம்பான், மே 7- கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பைசர்-பயோஎன்டெக், சினோவேக் மற்றும் அஸ்ட்ராஸேனேகாவிடமிருந்து  35 லட்சத்து 20 ஆயிரம் டோல் மருந்தளவு தடுப்பூசிகளை மலேசியா இம்மாதம் பெறவுள்ளது.

நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக மேலும் அதிகமான தடுப்பூசிகள் வரும் மாதங்களில் மலேசியா வந்தடையும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இந்த மருந்துகளைக் கொண்டு ஒருவருக்கு இரண்டு டோஸ் மருந்தளவு வீதம் நாட்டிலுள்ள 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

இம்மாதத்தில் 35.2 லட்சம் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் என்பதோடு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேலும் அதிகமான தடுப்பூசிகளை அட்டவணைப்படி பெறுவதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

இங்குள்ள தனியார் கோவிட்-19 தடுப்பூசி திட்ட மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

விநியோகப் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்த போதிலும் தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் நாடு பெற்றப் பின்னர் தேசிய தடுப்பூசித் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் முழுமை பெறும் என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் உள்ள அரச தந்திரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக 4,000 தடுப்பூசிகளை விநியோகிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :