ECONOMYNATIONAL

போலீஸ் துறையை வலுப்படுத்த மூன்று அம்சங்களுக்கு முன்னுரிமை- புதிய ஐ.ஜி.பி. தகவல்

கோலாலம்பூர், மே 7– அரச மலேசிய போலீஸ் படை பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய,  உயர்நெறியைக் கொண்ட மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றக் கூடிய அமைப்பாக விளங்குவதை உறுதி செய்வதற்கு  தேவையான மூன்று முக்கிய அம்சங்களை தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி கோடிட்டு காட்டியுள்ளார்.

அரச  மலேசிய போலீஸ் படை வீரர்கள் மத்தியில் உயர்நெறியைக் வலுப்படுத்துவது, சேவை முறையை மேம்படுத்துவது, மக்களின் நலன் காக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ந்து துணை நிற்பது ஆகியவையே அந்த மூன்று அம்சங்களாகும் என்று  அவர் சொன்னார்.

காவல் துறையினர் மத்தியில் உயர்நெறியை வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இவ்விவகாரம் தொடர்பிலான விளக்கமளிப்பு நிகழ்வுகளுக்கு அரச மலேசிய போலீஸ் படை ஏற்பாடு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, அனைத்து மாநில, மாவட்ட போலீஸ் தலைமையகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணிமனை பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடப்பு நிலவரங்கள் குறித்து காவல் துறையினருக்கு விளக்குவதற்கு ஏதுவாக பணிமனை பயிற்சிகள் குறைந்தது வாரம் ஒருமுறையாவது நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தங்கள் துறை சார்ந்த வீரர்களின் குற்றவியல் நடவடிக்கைகள், தவறான நடத்தை, ஊழல், கட்டொழுங்கு மீறல் தொடர்பான புகார்களை அரச மலேசிய போலீஸ் படை ஒருபோதும் மறைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையின் சேவை முறை மேம்பாடு குறித்து பேசிய அவர், காவல் நிலையங்களில்  பணியாற்றுவது மற்றும் சாலைத் தடுப்புச் சோதனைகளை மேற்கொள்வது ஆகியவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூகத்திற்கும் காவல் துறைக்கும் இடையிலான நட்புறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

மக்களின் நலன் காப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணை நிற்பது தொடர்பான மூன்றாவது அம்சம் குறித்து விளக்கிய அவர், எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் கோவிட்-19 பெருதொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு போலீஸ் படை எப்போதும் உறுதுணையாக இருந்து வருவதாக கூறினார்.

 


Pengarang :