HEALTHNATIONAL

எஸ்.ஒ.பி. விதிமுறையை மீறும் அரசியல்வாதிகள், பிரமுகர்களுக்கு குற்றப்பதிவு- போலீசாருக்கு உத்தரவு

புத்ரா ஜெயா, மே 12- நட்டமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அமலில் உள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனடியாக குற்றப்பதிவு வழங்கும்படி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர்மட்டத்தினருக்கு அரசாங்கம் சிறப்பு சலுகை காட்டுகிறது என்ற தோற்றம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மேல் மட்டத்தினருக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே வேறுபாடு காட்டப்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. மேல் மட்டத்தினர் என கூறப்படும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது உடனடியாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றார் அவர்.

அரசியல்வாதி அல்லது முக்கிய பிரமுகர் சம்பந்தப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறை நிகழும் போது சட்டத் துறை தலைவரின் முடிவுக்காக வாரக்கணக்கில் காத்திராமல் அதே இடத்தில் போலீசார் குற்றப்பதிவுகளை வழங்க வேண்டும். அதே இடத்தில் குற்றப்பதிவு வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரமுகராகவோ சாமான்ய மனிதனாகவோ இருந்தாலும் சட்டத்திலிருந்து யாரும் விதிவிலக்கு பெற்று விட முடியாது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

 


Pengarang :