HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19: சுகாதார அமைச்சின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் அரசு தயார்

ஷா ஆலம், மே 16– கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் சுகாதார அமைச்சின் சுமைகளைக் குறைப்பதில் உதவ சிலாங்கூர் அரசு எப்போது தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் அடிப்படையில் மாநில சுகாதாரத் துறைக்கு தேவையான தொண்டூழியர்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

சி.ஏ,சி. எனப்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் அத்துறை சார்ந்த பணியாளர்களின் சுமையைக் குறைப்பதில் உரிய உதவிகளை மாநில அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது என்றார் அவர்.

சி.ஏ.சி. மையத்தின் நிர்வாகம் சுகாதார அமைச்சு மற்றும் மாநில சுகாதார இலாகாவின் அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் நாங்கள் அவர்களின் சுமையை இலகுவாக்கும் வகையில் பல்வேறு வகைகளில் உதவி நல்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

சி.ஏ.சி. மையத்திற்கு வெளியே பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வசதிக்காக மாநில அரசு கூடாரங்களை அமைத்துத் தரும் என்று தனது டிவிட்டர் பதிவின் வழி அவர் தெரிவித்தார்.

செர்டாங், மேப்ஸ் மையத்தில் உள்ள குறைந்த தாக்கம் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்தில் வெளிமாநில நோயாளிகளும் அனுமதிக்கப்படுவது மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவது ஆகிய காரணங்களால் மனிவளப் பற்றாக்குறையை மாநில சுகாதார இலாகா எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :