நெரிசல்மிக்க இடங்களில் இரட்டை முகக்  கவசங்களை அணிவீர்- பொதுமக்களுக்கு வேண்டுகோள்

புத்ரா ஜெயா, மே 23- மருத்துவமனைகள் போன்ற நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட பகுதிகளுக்குச் செல்லும் போது இரட்டை முகக்கவசங்களை அணியும்படி  பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இரட்டை முகக்கவசங்களை அணிவதன் மூலம் நோய்ப் பரவலை 95 விழுக்காடு வரை தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எனினும், இரட்டை முகக்கவசங்களை அணியும் நடைமுறையை அரசாங்கம் இன்னும் கட்டாயமாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரட்டை முகக் கவசங்கள்  அணிவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனினும், அதனை கட்டாயமாக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு முகக்கவசவத்தை அணிவது மட்டுமே தற்போதைக்கு கட்டமாயமாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஜன நெரிசல் மிகுந்த அல்லது நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் இருக்கும் போது இரட்டை முகக் கவசங்களை அணிவதை நாங்கள் பெரிதும் ஊக்குவிக்கிறோம் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்க் கிருமிகள் சொட்டு வடிவில் மட்டுமல்லாது காற்றில் மிதந்து சென்றும் பரவுவதாகவும் அண்மையில் வெளிவந்த அறிக்கை ஒன்று கூறுகிறது என்றும் நோர் ஹிஷாம் கூறினார்.

 


Pengarang :