ECONOMYHEALTHPBTSELANGOR

குவாங், ஸ்ரீ கெம்பாங்கானில் நடைபெற்ற பரிசோதனையில் 182 பேரிடம் நோய்த் தொற்றுக்கான அறிகுறி

ஷா ஆலம், மே 23– நேற்று முன்தினம் இரு இடங்களில் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 182 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியம் கண்டறியப்பட்டுள்ளது.

குவாங் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இலவச பரிசோதனை இயக்கத்தில் 94 பேரும் ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் நடைபெற்ற பரிசோதனையில் 88 பேரும் அந்நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இலவச கோவிட்-19 பரிசோதனையில் குவாங் தொகுதியில் 1,955 பேரும் ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் 2,518 பேரும் பங்கு கொண்டதாக அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று பரவலை முறியடிப்பதன் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளதை இந்த இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு புலப்படுத்துவதாக அவர் மேலும் சொன்னார்.

கோம்பாக் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் உள்ள  14 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனைகளில்1,171 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :