HEALTHNATIONAL

பொது முடக்கம்- ஜூன் முதல் தேதி தொடங்கி  நாடு முழுவதும் 800 சாலைத் தடுப்புகள்

புத்ரா ஜெயா, மே 29– வரும் ஜூன் மாதம் முதல் தேதி முழு அளவிலான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்தவுடன்  நாடு முழுவதும் 800 இடங்களில் சாலைத் தடுப்புகள் போடப்படும் என்று  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

தற்போது நாடு தழுவிய நிலையில் 600 சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய போலீசார் மற்றும் உள்துறை அமைச்சின் கீழுள்ள அமலாக்க அதிகாரிகளை உள்ளடக்கிய 70,000 பேர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது 37,000 பேராக இருக்கும் சாலைத் தடுப்புகளில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 55,000 ஆகி உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிநுழைவுத் துறை, கடல் அமலாக்க பிரிவு, ரேலா உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 15,000 பேர் இந்த சாலைத் தடுப்பு பணிகளில் பங்கேற்கவுள்ளத் தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.

சாலைத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லாத பட்சத்தில் மேலும் அதிகமான அமலாக்கத் துறையினர் பணியில்  சேர்க்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் தொடர்பில் இன்று அமைச்சு நிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :