ECONOMY

100  பேரில் நால்வருக்கு  நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு- இலவச சோதனையில் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஜூன் 1– இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்கும் 100 பேரில் நால்வர் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படுவதாக எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழு கூறியது.

சுகாதார அமைச்சின் சுகாதாரப் பணியாளர்கள் வரும் வரை இத்தகைய நோயாளிகள் காத்திருக்கும் தருணம்தான் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்று அந்த பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ரோஸ்லி கூறினார்.

சுகாதார அமைச்சின் பணியாளர்கள் வருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர்  தங்கள் உடல் நிலையை அறிந்து கொள்ள பரிசோதனைக்கு வருகின்றனர். பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ளும் 100 பேரில் நால்வர் இத்தகைய தரப்பினராக உள்ளனர் என்றார் அவர்.

இத்தகைய பரிசோதனை இயக்கங்களில் 20 முதல் 40 வயது வரையிலானோர் அதிகளவில் கலந்து கொள்வதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் இதுபோன்ற சோதனைகளில் பங்கு கொள்ள இத்தரப்பினர் ஆர்வம் காட்டவில்லை. எனினும், அறிகுறி இல்லாத நிலையிலும் நோய்த் தொற்று பரவும் சாத்தியம் உள்ளது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மேலும் அதிகமானோர் பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள தொடங்கி விட்டனர் என்றார் அவர்


Pengarang :