PBTSELANGOR

மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் பண்டார் உத்தாமா தொகுதியில் 10,000 பேருக்கு உதவி

ஷா ஆலம், ஜூன் 15- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட  பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செலவிடும் தொகைக்கான உச்ச வரம்பை மாநில அரசு ஒரு லட்சம் வெள்ளியாக உயர்த்தியதன் வழி முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மேலும் அதிகமானோருக்கு உதவி செய்வதற்குரிய வாய்ப்பு  ஏற்பட்டுள்ளதாக பண்டார் உத்தாமா  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

வழக்கமாக நாங்கள் 50 வெள்ளி முதல் 100 வெள்ளி வரையிலான உணவுப் பொருள்களை வசதி குறைந்தவர்களுக்கு வழங்குவோம். கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் 100 வெள்ளிக்கும் கூடுதலாக உதவி வழங்கப்படுவதோடு வைட்டமின் ‘சி‘ மாத்திரைகளும் தரப்படுகின்றன என்றார் அவர்.

மாநில அரசின் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் விரிவான அளவில் உதவி செய்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

எனது தொகுதியைச் சேர்ந்த பலர் வருமான இழப்பு அல்லது வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக பி40 பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 700 பேர் எங்களிடம் உதவி பெற்று வருகின்றனர். இது தவிர உணவு வங்கித் திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு மாதாந்திர அடிப்படையில் உதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :