AMA

சிலாங்கூர் மக்களுக்கு குறைவான தடுப்பூசிகள் விநியோகம்- டாக்டர் ஜூல்கிப்ளி ஏமாற்றம்

ஷா ஆலம், ஜூன் 23– சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் அளவு இன்னும் குறைவாகவே உள்ளது குறித்து சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்குதல், தடுப்பூசிக்கான பதிவு மற்றும் இறப்பு சம்பவங்கள் தொடர்பான விகிதாசார அளவு அட்டவணையை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், இம்மாதம் 20ஆம் தேதி வரை 17,15 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அதே சமயம் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த பத்து நாட்களில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விகாரம் தொடர்பில், மேன்மை தங்கிய சுல்தான் அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தை சாடியிருந்த போதிலும் சிலாங்கூர் மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி குறைவாக வழங்கப்படுவது தொடர்பான விவகாரத்தை தாம் கடந்த மாதம் 28 ஆம் தேதி எழுப்பிய போதிலும் சிலாங்கூருக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் அளவில் இன்று வரை மாற்றமிலை என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் அளவை தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு அதிகப்படுத்துவதோடு விரைவுபடுத்தும் வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த 8 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :