ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பூலாவ் இண்டாவிலுள்ள 400 மூத்த குடிமக்கள் பைசர் தடுப்பூசி பெற்றன

ஷா ஆலம், ஜூன் 28- பூலாவ் இண்டாவில் வசிக்கும் 400 மூத்த குடிமக்கள் நேற்று முதலாவது டோஸ் பைசர்-பயேஎன்டெக் தடுப்பூசியைப் பெற்றனர். அத்தீவிலுள்ள சுகாதார மையத்தில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நடைபெற்ற இந்த தடுப்பூசி இயக்கத்தில் அவர்கள் நேரம் தவறாமலும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டதாக கோலக்கிள்ளான்  சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசான் ஜமான் கூறினார்.

இந்த தடுப்பூசி இயக்கத்தில் கலந்து கொள்ள அவர்கள் காட்டிய உற்சாகம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் காலை 7.00 மணி முதல் தடுப்பூசி மையத்தின் வாசலில் காத்திருந்தனர் என்றார் அவர்.

பூலாவ் இண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்பூசி இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் முழு ஈடுபாட்டுடன் தங்கள் பணியை ஆற்றிய அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெறுவதற்கு தங்களைப் பதிந்து கொள்ளாதவர்கள் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்ட அவர், பதிவு செய்தவர்கள் தங்களுக்கான தருணம் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார்


Pengarang :