HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 – நோய் ஒழிப்பு- மத்திய அரசு வியூகத்தை மாற்ற வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 29- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தனது  வியூகத்தை மாற்ற வேண்டும். தடுப்பூசித் திட்டத்திற்கு அது முக்கியத்துவம் அளித்து தினமும் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நடத்த வேண்டும்.

நோய்த் தொற்றை குறைப்பதில் கடந்த ஒரு மாத காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதல் கட்டம் தோல்வி கண்டுள்ளதால் அந்த ஆணையை தொடரும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தினசரி மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் ஆற்றலை நாடு கொண்டுள்ளதாக தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

நம்மிடம் உள்ள சக்தியை தினசரி அதிக எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமலாக்கத்தை கண்காணிப்பதற்கு அல்ல என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி செலுத்துவதில் காணப்படும் மந்த நிலை மற்றும் நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை நீடிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு மனோரீதியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ குறிப்பிட்டார்.

மாநிலங்களுக்கு குறிப்பாக சிலாங்கூருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவு குறைவாகவே உள்ளது. சிலாங்கூர் மாநில அரசின் சொந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு நோய்த் தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்களுக்கு குறைவான தடுப்பூசிகள் வழங்கப்படுவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் தனது கண்டத்தை வெளிப்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டிய மேரு சட்டமன்ற உறுப்பினர்  முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார், நோய்த் தொற்று அதிகம் பதிவாகும் மாநிலமாக சிலாங்கூர் விளங்கினாலும் தடுப்பூசி இயக்கம் இங்கு மிகவும் மந்தமாக மேற்கொள்ளப்படுவது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றார்.


Pengarang :