HEALTHMEDIA STATEMENTNATIONAL

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியை செலுத்துவதற்கான கால இடைவெளி 9 வாரங்களாக குறைப்பு

சிப்பாங், ஜூலை 2- அஸ்ட்ராஸேனேகாவின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான கால இடைவெளியை 12 வாரங்களிலிருந்து 9 வாரங்களாக குறைக்க கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் அஸ்ட்ராஸேனேகா முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற சுமார் பத்து லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான அறிவிப்பை விரைவில் பெறுவர் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்  கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியை ஒன்பது வாரங்களாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

ஜப்பானிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய  பத்து லட்சம் அஸ்ராஸேனேகா தடுப்பூசிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடையும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பதிவு செய்தும் இன்னும் தடுப்பூசி பெறாமலிருக்கும் ஏழு லட்சம் மூத்த குடிமக்களின் விவகாரத்திற்கு விரைவில்  தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார். 

 


Pengarang :