ECONOMY

துணை மாவட்டங்களை கடப்போருக்கு உடனடி அபராதம்- சிலாங்கூர் போலீஸ் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூலை 3– இன்று தொடங்கும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முக்கிம் எனப்படும் துணை மாவட்டங்களை அனுமதியின்றி கடப்போருக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீசார் எச்சரித்துள்ளனர்.

எல்லையைக் கடந்தவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் அதேவேளையில் மீண்டும் திரும்பிச் செல்லும்படி உத்தரவிடப்படுவர் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

எல்லையைக் கடப்பதற்கு முன்னரே சாலைத் தடுப்பில் நிறுத்தப்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படாது. மாறாக, அவர்கள் திருப்பி அனுப்பப்படுவர். எல்லையைக் கடந்தால் மட்டுமே குற்றமாக கருதப்படும் என அவர் சொன்னார்.

மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற “சிலாங்கூர் மாநிலத்தில் பி.கே.பி.டி. தொடர்பில் கலந்துரையாடல்- நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை“ எனும் நேரடி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது சிலாங்கூர் மாநில மக்கள் அதிகம் புரிந்த எஸ்.ஒ.பி. விதிமீறில் குற்றங்களில் முகக்கவசம் அணியாதது, கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியது, அனுமதியின்றி எல்லை கடந்தது ஆகியவை அதிகமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்பு குறித்து கருத்துரைத்த அவர், அனுமதி கடிதம் இன்றி பல தொழிற்சாலைகள் செயல்பட்ட வேளையில் சில தொழிற்சாலைகள் வேறு துறைகளுக்கான அனுமதி கடிதத்தைக் கொண்டு செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

தொழிற்சாலைகளில் 60 விழுக்காட்டுத் தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல தொழிற்சாலைகள் அந்த எண்ணிக்கையைத் தாண்டி அதிக  தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருந்தது தாங்கள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

 


Pengarang :