HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

1.553  மெந்தாரி கோர்ட் குடியிருப்பாளர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல் செய்யப்பட்ட பிஜேஎஸ் 8, மெந்தாரி கோர்ட் குடியிருப்பாளர்களில் 1,553 பேர் இன்று பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற்றனர்.

இவ்வட்டார மக்களுக்காக நடமாடும் சுகாதார  கிளினிக் மற்றும் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் போன்ற வசதிகளை மாநில சுகாதார இலாகாவின் வாயிலாக மாநில அரசு ஏற்படுத்தித் தந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட முதலாவது கோவிட்-19 மதிப்பீட்டு மையம் இதுவாகும். இங்கு மேற்கொள்ளப்படும் சோதனையில் நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மேல் கிசிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துப்படுவர் என்றார் அவர்.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பகுதியில் உள்ள சுமார் எட்டாயிரம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பரிசோதனையில் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக சமூகத்தில் நோய்த் தொற்று ஊடுருவல் தடுக்கப்பட்டு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீண்டும் அமல்படுத்தப்படுவது தடுக்கப்படும். நோய்த் தொற்றைக் குறைப்பதில் பொதுமக்களும் எங்களின் முயற்சிக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.

மெந்தாரி கோர்ட் குடியிருப்பிலுள்ளவர்கள் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவின் முயற்சியால் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :