MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKANSELANGOR

வெள்ளைக் கொடி பறந்த 100 வீடுகள் உள்பட 1,500 குடும்பங்களுக்கு  ரவாங் தொகுதி உதவி

ஷா ஆலம், ஜூலை 6- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி கோரி வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்ட 100 குடும்பங்கள் உள்பட 1,500 குடும்பங்களுக்கு ரவாங் சட்டமன்றத் தொகுதி சார்பில் உதவி வழங்கப்பட்டது.

கடந்த மூன்று வார காலத்தில் ரவாங் சுற்றுவட்டார மக்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

அரிசி, சமையல் எண்ணெய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேளையில் தொகுதி சேவை மையத்தின் வாயிலாக உணவு வங்கியும் ஏற்படுத்தப்பட்டதாக  அவர் சொன்னார்.

உணவு வங்கித் திட்டத்தின் கீழ் உணவு பொருள்களை எனது அலுவலகத்தின் முன் வைப்பதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்தேன். உணவு தேவைப்படுவோர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி அப்பொருள்களை எந்த நேரத்திலும் பெற்றுச் செல்லலாம் என்றார் அவர்.

இத்திட்டத்தின் வாயிலாக சிரமத்தில் உள்ளவர்களுக்கு ஓரளவு உதவ முடியும் என நம்புகிறோம். இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மேலும் அதிகமான உணவு வங்கிகள் தொகுதியில் இதர பகுதிகளில் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

எனினும், வசதி இருந்தும் உதவி பெறுவதற்காக வெள்ளைக் கொடியை பறக்கவிடும் சில தரப்பினரின் செயல் வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 15 குடும்பங்கள் இத்தகையச் செயலைப் புரிந்துள்ளன. மேலும் சிலர் உதவி கிடைத்த போதிலும் கொடிகளை அகற்ற மறுக்கின்றனர். தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக உதவி பெறுவோர் குறித்த தகவல்களை முன்கூட்டியே சேகரிக்கவுள்ளோம் என்றார் அவர்.

 


Pengarang :