HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பி.பி.வி. செல்வதற்கான கிராப் கார் கட்டணக் கழிவு அனைத்து வயதினருக்கும் விரிவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 6– கிராப் கார் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு (பி.பி.வி.) செல்வதற்கு வழங்கப்படும் 20 வெள்ளி கட்டணக் கழிவு இனி வயது வரம்பின்றி அனைவருக்கும் வழங்கப்படும்.

எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திற்கும் கிராப் மலேசியா நிறுவனத்திற்கும் இடையே இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கின் போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இத்தகவலை வெளியிட்டார்.

கிராப் வாகன சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வதற்கு மாநில அரசு வழங்கும் 20 வெள்ளி கட்டணக் கழிவு இனி அனைத்து வயதினருக்கும் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

தடுப்பூசி என்பது 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று என்பதால் தடுப்பூசி பெறச் செல்லும் சிலாங்கூர் மாநில மக்கள் அனைவருக்கும் இக்கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தடுப்பூசி பெறச் செல்லும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


Pengarang :