HEADERADHEALTHNATIONALPBT

கலவையான தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு உத்தேசிக்கவில்லை

புத்ரா ஜெயா, ஜூலை 14- இரு வகையான கோவிட்-19 தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த சுகாதார அமைச்சு உத்தேசிக்கவில்லை.

இந்த தடுப்பூசி கலவை ஆக்ககரமான விளைவுகளைத் தரும் என்பதற்கு தரவு ரீதியான எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இரு விதமான கோவிட்-19 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதன் மூலம் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனைக் காண முடியும் என்ற ஆதாரப்பூர்வமான சான்றுகளை சம்பந்தப்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு பெறவில்லை என்று அவர் சொன்னார்.

கலையான தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவ்வாறு செய்வோம். தற்போதைக்கு அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்றார் அவர்.

மேற்கத்திய நாடுகளின் தயாரிப்பான ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளுடன் கிழக்கு நாட்டின் தயாரிப்பான சினோவேக்கை கலந்தால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று அவர் மேலும் சொன்னார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசியை வழங்கும் கடப்பாட்டை சுகாதார அமைச்சு கொண்டுள்ளதால் ஆக்கத்திறன் நிரூபிக்கப்படாத வழிமுறையைப் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :