HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஆகஸ்டு முதல் தேதிக்குள் கே.எல்.-சிலாங்கூர்வாசிகள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர்

ஷா ஆலம், ஜூலை 17- வரும் ஆகஸ்டு மாதம் முதல்  தேதிக்குள்ள சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர்வாசிகள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுன் தலைமையில் நடைபெற்ற கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கான தடுப்பூசித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறுவதற்கான  தேதி இன்னும் கிடைக்காத கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் பேருக்கு இம்மாதம் 26ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி வழங்கப்படுவதும் அத்திட்டத்தில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்தை (செல்வேக்ஸ்) பிக் எனப்படும்  தேசிய தடுப்பூசித் திட்டத்துடன் இணைக்கவும் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறைகள்  முழுவீச்சில் செயல்படுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசின் சமூக மற்றும் தொழில்துறைக்கான தடுப்பூசித் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

பெரிய அளவிலான ஐந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள செல்கேர் கிளினிக்குகள் வாயிலாக  பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தினசரி நாற்பதாயிரம் தடுப்பூசிகள் வரை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

 


Pengarang :