ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மேலும் சில தரப்பினருக்கு விரிவு படுத்தப்படும்

ஷா ஆலம், ஆக 13- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மேலும் சில தரப்பினரை இலக்காக கொண்டு விரிவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார்.

புதிய இலக்காக அடையாளம் காணப்பட்ட தரப்பினரில் உயர்கல்விக்கூட மாணவர்கள் மற்றும் பணியாளர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, இன்னும் தடுப்பூசி பெறாத விளையாட்டாளர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஈடுபட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பெறுவதில் சில உயர்கல்விக் கூடங்களும் எங்களின் உதவியை நாடியுள்ளன. அத்தரப்பினருக்கு நாம் உதவி வழங்குவோம் என்று நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட தடுப்பூசிகள் மீதப்படும் என்ற கவலை மாநில அரசுக்கு இல்லை எனக் கூறிய அவர், இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி பெறுவதற்கான வயதை அடையக் கூடிய 17 வயது இளையோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர் என்றார்.

அதோடு மட்டுமின்றி, மாநிலத்திலுள்ள 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் ஊக்க மருந்தாக மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாங்கள் அளிப்பாணை அளித்துள்ள அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாக பயன்படுத்த முடியும் என நம்புகிறோம். கைவசம் இருக்கும் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்படும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி செல்வேக்ஸ் திட்டத்தை தொடக்கியது.


Pengarang :