ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கைவிடப்பட்ட வீடுமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரூட்ட மாநில அரசு நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 27– குத்தகையாளர்கள் அல்லது மேம்பாட்டாளர்கள் கிடைக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 15,010 வீடுகளை உள்ளடக்கிய 111 வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரூட்டுவதற்கான ஆக்ககரமான நடவடிக்கைளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் கீழுள்ள கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட மீட்சி செயல்குழு மற்றும் ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட மீட்சி துணைக்குழு ஆகியவை இத்திட்டங்களின் மேம்பாட்டைக் கண்காணித்து வருவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான விவகாரங்களில்  மாநில அரசுக்கு குறைவான அதிகார வரம்பைக் கொண்டுள்ளதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அது மத்தியஸ்ராக மட்டுமே செயல்படும் என்று அவர் சொன்னார்.

இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக வீடு வாங்கியோர், நில உரிமையாளர், மேம்பாட்டாளர், திவால் இலாகா ஆகிய தரப்பினருடன் பேச்சு நடத்துவதும் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.

சட்டமன்றத்தில் இன்று கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ரோட்சியா இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :