ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் பீடுநடை போட மலேசியா காத்திருக்கிறது -செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்

ஷா ஆலம், ஆக.27-நாளைய மலேசியா டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் பீடுநடை போட தயாராக இருக்கிறது. அதற்கான வழியை வரும் 15-ஆவது பொதுத் தேர்தல் உருவாக்கித் தரும். எனவே, அண்மையில் பிரதமர் பதவி அவருக்கு அருகில் வந்து வந்து நழுவிச் சென்றதைப் பற்றி வருத்தம் அடையாமல் அனைவரும் நம்பிக்கையுடன் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறுவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தை வகித்து வருபவர் சமதருமத் தலைவராக விளங்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். மலாய்த் தலைவர்களில் பலர் சொந்த இனத்திற்கான அரசியலை மட்டும் முன்னெடுக்கும் வேளையில் நாட்டின் பல இன சமுதாயத்திற்கும் பன்முகத் தன்மைக்கும் ஏற்ப பல்லின அரசியலை அன்வார் முன்னெடுத்து வருகிறார். 

இதற்காகவே மறுமலர்ச்சி இயக்கத்தைத் தொடங்கி, அதனை அடுத்து மக்கள் நீதிக் கட்சி என்னும் பல இனக் கட்சியை உருவாக்கி அதன்வழி ஜனநாயகக் கடைமையை ஆற்றி வருகிறார். பிரதமர் பதவிதான்  இலட்சியம் என்று கருதினால், மற்ற மலாய்க் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து அவர் எளிதாக அதை அடைந்துவிட முடியும். ஆனால், அவர் அப்படிப்பட்ட தலைவர் இல்லை.

இவரைப் போல வேறு எந்தத் தலைவரும் தன்னுடைய அரசியல் பயணத்தில் கொடிய துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்ததில்லை. மற்ற மலாய்த் தலைவர்களைப் போலன்றி இவர் ஒருவர் மட்டுமே மேடுபள்ளம் நிறைந்த முள்பாதையில் பயணித்து வருகிறார். அதனால்தான் சிறைவாசத்தை அனுபவிக்க நேர்ந்தது. அதைவிட, ஒரு ஜனநாயக நாட்டில் கன்னத்திலும் கண்ணிலும் குத்தப்பட்ட கொடுமைக்கும் ஆளானார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான அரிய வாய்ப்பு 2018-ஆம் ஆண்டில் அமைந்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் தேசிய அளவில்  அரசியல் மாற்றத்தை விரும்பியும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை நம்பியுமே வாக்களித்தனர்மக்கள் வழங்கிய அந்த வாய்ப்பை, கூட இருந்தே குழிபறித்துக் கெடுத்தவர் துன் மகாதீர்.

தற்பொழுது அண்மையில் நாட்டில் நடந்த அரசியல் மாற்றத்தின்போதுகூட அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு, பிகேஆர் கட்சியினரையும் கடந்து நடுநிலையாளர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரிடமும் எழுந்தது. ஆனால், கொல்லைப்புற வழிக்கு பழக்கப்பட்டவர்களும் பதவிமோகம் கொண்டவர்களும் அரசியல் வஞ்சகர்களும் கூட்டுசேர்ந்து அன்வாருக்கான வாய்ப்பை தட்டிப் பறித்தனர்.

ஆனால், எதற்கும் களங்காத அன்வார், ஜனநாயக கடமையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். நாட்டில் பக்குவப்பட்ட தலைவராகவும் கனிந்த நிலையை எட்டியவராகவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உருமாறியிருக்கிறார்.

எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் மூலம் காலமகள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கவிருக்கும் பொன்னான வாய்ப்பிற்காக இன்றிலிருந்தே நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணி காண்போம் என்று பி.கே.ஆர். கோத்தா ராஜா தொகுதி தலைவருமான ஜி.குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

.

 


Pengarang :