ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

16 லட்சம் அரசு ஊழியர்களில் 2.2 விழுக்காட்டினர் தடுப்பூசிக்கு பதிந்து கொள்ளவில்லை

போர்ட்டிக்சன், ஆக 29- நாட்டிலுள்ள 16 லட்சம் அரசு ஊழியர்களில் சுமார் 2.2 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் பதிந்து கொள்ளவில்லை.

தடுப்பூசியைப் பெறுவதற்கு இம்மாதம் 19ஆம் தேதி வரை பதிவு செய்யாத அந்த 2.2 விழுக்காட்டினர் மீது பொதுச்சேவைத் துறை கவனம் செலுத்தவுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமது கைருள் அடிப் அப்துல் ரஹ்மான் கூறினார்.

தடுப்பூசி பெறாததற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் இதன் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் அவர்கள் சார்ந்த துறைகளின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அரசு ஊழியர்களின் பெயர்களுடன் மைசெஜாத்ரா செயலியின் தரவுகளை ஒப்பிட்டு பார்த்த போது 16 லட்சம் பேரில் 2.2 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெறுவதற்கு அந்த செயலியில் பதிந்து கொள்ளாதது தெரிய வந்தது என்றார் அவர்.

தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். காரணம், சேவைத் துறைகளை திறந்து விடப்படும் பட்சத்தில்  அனைவரும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதாக இருக்கும். தடுப்பூசி பெற்றவர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கும் சூழ்நிலை உள்ளது என அவர் சொன்னார்.

இம்மாதம் 19 ஆம்  தேதி வரையிலான காலக்கட்டத்தில் 74 விழுக்காட்டு அரசு ஊழியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 17.8 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :