ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கெடா, சகதி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிலாங்கூர் 100,000 வெள்ளி நன்கொடை

யான், செப் 1- கடந்த மாதம் 18ஆம் தேதி ஏற்பட்ட சகதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கெடா மாநிலத்தின் யான் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் மாநிலம் ஒரு லட்சம் வெள்ளியை வழங்கி உதவியுள்ளது.

இப்பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தித்தி ஹயுன் நீர் வீழ்ச்சி பகுதிக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று நேரில்  வருகை மேற்கொண்டார். அப்பயணத்தின் போது அவர் அந்த நிவாரணத் தொகையை கெடா மாநிலத்தின் மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் டத்தோ நஜ்மி அகமதுவிடம் ஒப்படைத்தார்.

மேலும் செல்கேட் அறவாரியம் வழங்கிய அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உபகரணங்களை அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கினார்.

இது தவிர, இந்த பேரிடரில் உயிரிழந்த அறுவரின் குடும்பத்தினருக்கும் அவர் உதவித் தொகையை ஒப்படைத்தார்.

அந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கெடா மாநிலம் எதிர்நோக்கும் சுமையை சிலாங்கூர் அரசின் இந்த உதவி ஓரளவு குறைக்கும் என அமிருடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அந்த பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு கெடா மாநிலத்திற்கு ஆறு கோடி வெள்ளி வரை தேவைப்படும் நிலையில் சிலாங்கூர் அரசின் இந்த உதவி மிகவும் சிறியதுதான். எனினும், உதவித் தேவைப்படுவோருக்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வது மாநில அரசைப் பொறுத்ததாகும் என்றார் அவர்.


Pengarang :