HEALTHSELANGOR

நடமாடும் தடுப்பூசி இயக்கம் அடுத்த வாரம் தொடங்கும்

ஷா ஆலம், செப் 9- சிலாங்கூர் மாநிலத்தில் நடமாடும் தடுப்பூசி இயக்கம் அடுத்த வாரம் தொடங்கப்படும். இந்த இயக்கத்தின் வாயிலாக தினசரி 1,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதிலிருந்து மாநில மக்கள் யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம்  அமல்படுத்தப்படுவதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் வாகனம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

நோய் காரணமாக படுக்கையில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறைகளிடம் ஒப்படைத்து விடுவோம். அரசு சாரா அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ளும் என்றார் அவர்.

இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தின் வழி தினசரி ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் வழி நோய்த் தடுப்பாற்றலை முழுமையாக கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என அவர் சொன்னார்.


Pengarang :