ECONOMYSELANGOR

சிலாங்கூரிலுள்ள 17 சுற்றுலா சங்கங்களுக்கு 255,000 வெள்ளி மானியம்

ஷா ஆலம், செப் 9- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 17 சுற்றுலா சங்கங்களுக்கு வழங்குவதற்காக மாநில அரசாங்கம் 255,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் திட்டங்களை மேற்கொள்வதற்காக அந்த சங்கங்களுக்கு தலா 15,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

அந்த 17 சங்கங்களுக்கும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று இயங்கலை வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் சுற்றுலாத் துறை தொடர்ந்து துடிப்புடன் செயல்படுவதற்கும் “சிலாங்கூரை முதலில் வலம் வருவோம்“ எனும் இயக்கம் வெற்றியடைவதற்கும்  சுற்றுலா சங்கங்கள் உரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மாநில சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :