HEALTHMEDIA STATEMENT

பி.பி.என். இரண்டாம் கட்டத்தில் சிலாங்கூர் நுழைந்தாலும் மக்களுக்கு எச்சரிக்கை உணர்வு எப்போதும் தேவை

ஷா ஆலம், செப் 10- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறிய போதிலும் மாநில மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதோடு எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி வர வேண்டும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

மக்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு மீண்டும் நோய்த் தொற்று பரவுவதற்கும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கும் வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசித் திட்டத்தினால் நோய்த் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக கூறிய அவர், நாம் எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றத் தவறினால் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு காணும் அபாயம் உள்ளது என்றார்.

இறைவன் அருளால் சிலாங்கூர் இன்று தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறியுள்ளது. தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதோடு மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று தொடங்கி பி.பி.என். இரண்டாம் கட்டம் அமலுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மாவட்ட எல்லைகளைக் கடக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 


Pengarang :