ECONOMY

எஸ்.ஒ.பி. விதிகளை மீறினால்  பொழுதுபோக்கு மையங்கள் மூடப்படும்- உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் எச்சரிக்கை

ஷா ஆலம், செப் 18- வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறினால் அனைத்து பொழுது போக்கு மையங்களும் மூடப்படும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் எச்சரித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகள் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறியதைத் தொடர்ந்து நகர்புறங்களுக்கு வெளியில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுவதாக மாவட்ட மன்றத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

பல பொழுது போக்கு மையங்களில் தாங்கள் மேற்கொண்ட சோதனைகளில் வருகையாளர்களில் பலர் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்காதது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

நீண்ட நாட்களாக வீட்டில் அடைபட்டு கிடந்த காரணத்தால் குடும்பத்தினருடன்  இது போன்ற பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல பெரும்பாலோர் ஆர்வம் காட்டுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆயினும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளையும்  நிர்வாக நடைமுறைகளையும் அவர்கள் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.

வார இறுதி நாட்களில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு பணியை நாங்கள் தீவிரப்படுத்தவிருக்கிறோம். வருகையாளர்கள்  விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட பகுதிகளை மூடுவது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

பொதுழுது போக்கு மையங்களுக்கு வருவோர் சுத்தத்தை முறையாக கடைபிடிக்காதது குறித்தும் முகமது  ஹஸ்ரி ஏமாற்றம் தெரிவித்தார். குப்பைகளும்  மீந்து போன உணவுப் பொருள்களும்  அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதோடு ஆறுகளிலும் வீசப்படுவதாக  அவர் சொன்னார்.


Pengarang :