MEDIA STATEMENTPBTYB ACTIVITIES

தாமான் செந்தோசாவில் அடிப்படை வசதி பிரச்னைகள்- அதிகாரிகளுடன் குணராஜ் ஆய்வு

கிள்ளான், செப் 24- தாமான் செந்தோசா ஜாலான் லக்ஸ்மணா 6 சுற்று வட்டாரத்தில் காணப்படும் பல்வேறு அடிப்படை வசதி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக கிள்ளான் நகராண்மைக்கழத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் கும்புலான்  டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

அப்பகுதியில் காலியாக உள்ள கடைகள் குப்பை கொட்டும் இடங்களாக பயன்படுத்தப்படுவது, போக்குவரத்துக்கு இடையூறு, கடைகளை பழைய பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது, பழைய  வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பது, தெரு விளக்கு பிரச்னை,  பயன்படுத்தப்படாத கடைகள் போதைப் பித்தர்களின் கூடாரமாக பயன்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை அப்பகுதி வணிகர்கள் முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காடு மண்டிக் காணப்படும் கைவிடப்பட்ட நிலங்களை சுத்தப்படுத்துவது, பயன்படுத்தப்படாத கடைகளின் கதவுகள் மற்றும் சன்னல்கள் முழுமையாக மூடப்பட்டிருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்ப நகர் திட்டமிடல் மற்றும் சுகாதாரத் துறைகளை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக குணராஜ் கூறினார்.

புகார்கள் மற்றும் பிரச்னைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று தீர்வு காண்பதற்கு ஏதுவாக இவ்வட்டார வணிகர்களை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் புகார்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்து  கொள்வதற்காக 14 நாட்களுக்குள்  தொகுதி சேவை மையம் சம்பந்தப்பட்ட துறை பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :