ECONOMY

சிலாங்கூரில் 0.7 விழுக்காட்டு ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் தடுப்பூசி பெறவில்லை

ஷா ஆலம்,  செப் 25- சிலாங்கூரில் சேவையாற்றும் 61,000 ஆசிரியர்களில் 300 பேர் அல்லது 0.7 விழுக்காட்டினர் மட்டுமே இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்று  மாநில கல்வி இயக்குநர் அனிஸ்மா எம் நோர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும். எனினும் கல்வியமைச்சின் விதிமுறைகளுக்கேற்ப அவர்கள் வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறாத ஆசிரியர்கள் இயங்கலை வாயிலாக மட்டுமே பாடங்களை போதிக்க அனுமதிக்கப்படுவர். இவர்களை வகுப்புகளில் பாடம் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் நோய்த் தொற்று  மற்றவர்களுக்கும் பரவும் அபாயம்  அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகாவில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான கற்றல் தகுதி திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறாமலிருப்பதற்கு  சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுவதாக  குறிப்பிட்ட அனிஸ்மா, இத்தகையோரிடம் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இந்நோக்கத்திற்காக சிறப்பு செயல்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இக்குழு ஆலோசக சேவையையும் வழிகாட்டுதலையும் வழங்கும் என்றார் அவர்.


Pengarang :