PBTSELANGOR

சிலாங்கூர் அரசின் தடுப்பூசி இயக்கத்திற்கு மத்திய அரசு உதவ வேண்டும்- எலிசபெத் வோங் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, செப் 26- கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அதிகரிப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தடுப்பூசிக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளதால் இவ்விவகாரத்தில் மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாக புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார்.

டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நடமாடும் தடுப்பூசித் இயக்கத்திற்கு  சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 700 டோஸ் தடுப்பூசிகள் போதுமானவையாக இல்லை என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற அதிகமானோர் வந்த காரணத்தால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. நடமாடும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் 100 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்று விட்டதை மத்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன. எனினும் அந்த தரவுகள் துல்லியமானவை என்று நான் நம்பவில்லை என்றார் அவர்.

உதாரணத்திற்கு, நேற்று தடுப்பூசி பெறுவதற்காக மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர் அதிக எண்ணிக்கையிலானோர் இன்னும் தடுப்பூசியைப் பெறவில்லை என்பதை இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர்வாசிகள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களை அமல் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :