A
ECONOMYNATIONALSELANGOR

அனுமதியின்றி செதிங்கி நீர் வீழ்ச்சி பகுதியில் நுழைந்த 56 பேர் கைது

ஷா ஆலம், செப் 27– முறையான அனுமதியின்றி செரெண்டா, செதிங்கி நீர் வீழ்ச்சி பகுதியில் நுழைந்த 56 மலையேறிகளை சிலாங்கூர் மாநில வன இலாகா கைது செய்தது.

நேற்று முன்தினம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 19 முதல் 33 வயது வரையிலான அந்த 56 பேரும் கைது  செய்யப்பட்டதாக  மாநில வன இலாகா இயக்குநர் டத்தோ அகமது பாட்சில் அப்துல் மஜிட் கூறினார்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வன இலாகா அதிகாரிகளும் பணியாளர்களும் போலீசாரின் துணையுடன் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் குடியிருப்பு பகுதிகளின் வழியாக அந்த மலையேறிகள் சட்டவிரோதமாக காட்டிற்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அந்த மலையேறிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதோடு குப்பைகளையும் ஆங்காங்கே வீசிச் சென்றதாக அவர்கள் புகார் தெரிவித்தனர் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலம் இன்னும் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் நிலையில் உள்ளதால் இங்கு மலையேறுவது மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக கோல குபு பாரு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Pengarang :