HEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் நடுத்தர தடுப்பூசி மையம் தேவை- சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்து

கிள்ளான், செப் 27- கிள்ளான் மாவட்டத்தில் மேலும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக இங்கு நடுத்தர தடுப்பூசி மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அவர்களிடம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்துள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

கிள்ளான் போன்ற பெரிய நகரங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படக்கூடிய நடுத்தர தடுப்பூசி மையம் அமைக்கப்பட வேண்டும் என்று தாம் அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.

இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள்  அதனை விரைந்து பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அந்த தடுப்பூசி மையம் செயல்பட்டால் போதுமானது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளேன் என்று அவர் கூறினார்.

தமது இந்த கோரிக்கை தொடர்பில் அமைச்சர் கைரி பின்னர் பதிலளிப்பார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்று பண்டமாரான் தொகுதி நிலையில் நடைபெற்ற செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோர் தடுப்பூசி பெற வந்தது இங்கு நடுத்தர அளவில் தடுப்பூசி மையம் ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

நேற்றைய நிகழ்வுக்கு 1,200 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் தடுப்பூசி பெறுவதற்கு நூற்றுக்கணக்கானோர் வெளியில் காத்திருந்தனர். அவர்கள் தடுப்பூசி பெற விரும்பாத தரப்பினர் கிடையாது. மாறாக, தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்தும் அதிகாரிகளிடமிருந்து இன்னும் அழைப்பு கிடைக்காதவர்களாக உள்ளனர் என அவர் விளக்கினார்.


Pengarang :