HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 20 லட்சம் பேர் கோவிட்19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

கோலாலம்பூர், செப் 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 20 லட்சத்து 5 ஆயிரத்து 942 பேர் அந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16,430 பேர் அந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் ஆகக்கடைசி நிலவரங்கள் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 10,959 கோவிட்-19 சம்பவங்களில் 205 அல்லது 1.9 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை கொண்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய 98.1 விழுக்காடு அல்லது 10,754 சம்பவங்கள் நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிராத முதல் கட்டம் மற்றும் இலேசான அறிகுறியைக் கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றார் அவர்.

மூன்றாம் கட்ட நோயாளிகள் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களாவர், நான்காம் கட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும் என்பதோடு ஐந்தாம் கட்ட நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்படும்.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 980 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நோர் ஹிஷாம், அவர்களில் 862 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில் 118 பேருக்கு அந்நோய்க்கான சாத்தியத்தின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.


Pengarang :