ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெரிய திட்டங்களை ஒத்தி வைத்து சிரமத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலாகச் செலவிடுங்கள்- அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், செப் 28- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் (2021-2025) இடம் பெற்றுள்ள  பெரிய திட்டங்களை ஒத்தி வைக்கும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையம், இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டம், எம்.ஆர்.டி.3 இலகு ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

மக்கள் பட்டினி, வேலையின்மை, உணவின்மை, சிறப்பான கல்வியின்மை  போன்ற பிரச்சனைகளை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் பெரிய திட்டங்களை அமல்படுத்துவதால் என்ன பலன் கிட்டிவிடப் போகிறது என அவர்  கேள்வியெழுப்பினார்.

பெரும்பாலான மக்கள் நெருக்கடியில் இருக்கும் போது அரசாங்கம் பெரிய திட்டங்களை அமல்படுத்துவதால் எந்த பலனும் விளையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று 12 வது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பூமிபுத்ராக்களுக்கு உதவுவதிலும் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் சபா, சரவா பூமிபுத்ராக்களுக்கு பயிற்சிகள், கல்வி, தரமான சுகாதாரத்தை வழங்குவதில் என்ன தவறு உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

 


Pengarang :