MEDIA STATEMENTNATIONAL

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2.81 கோடி பேர் பங்கேற்பு

புத்ரா ஜெயா, அக் 1- மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டுடமை 2020 கணக்கெடுப்பில் நாட்டிலுள் 3 கோடியே 26 லட்சம் மக்கள் தொகையில் 85.8 விழுக்காட்டினர் அதாவது 2 கோடியே 81 லட்சம் பேர் இதுவரை பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் 95.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 66 லட்சம் பேர் மலேசியப் பிரஜைகள் என்றும் 4.8 விழுக்காட்டினர் அல்லது 14 லட்சம் பேர் பிரஜைகள் அல்லாதவர்கள் என்றும் 2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்  ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹிடின் கூறினார்.

கிளந்தான், ஜொகூர், கூட்டரசு பிரதேசம் போன்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு ஏறக்குறைய முற்றுப் பெற்று விட்டதாக க்கூறிய அவர், தரவுகளைச் சரிபார்க்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படு வருவதாகச் சொன்னார்.

மலேசியாவில் மிக அதிகமாக ஜொகூரில் 104.9 விழுக்காட்டினரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நிலையில் புத்ரா ஜெயா (101.3%), நெகிரி செம்பிலான் (100.4%), கூட்டரசு பிரதேசம் (99.2%) பெர்லிஸ் (95%) கிளந்தான் (93.8) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார் அவர்.

சில மாநிலங்களில் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை தாண்டியுள்ளது குறித்து குறிப்பிட்ட அவர், கணக்கெடுப்பு நடத்தும் போது மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கை பதிவானதாகச் சொன்னார். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும் காரணத்தால் இந்த எண்ணிக்கை உயர்வு பதிவாகியிருக்கலாம் என்றார்.

சில  மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டதற்கு அவர்களின் ஒத்துழையாமைப் போக்கு காரணம் இல்லை என்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாவே இந்த எண்ணிக்கை குறைவு பதிவாகியுள்ளது என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :