ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோயாளிகளை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் சேவை- பத்தாங் காலி தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், அக் 3- மருத்துவர்களைச் சந்திப்பதற்கு முன்பதிவைப் பெற்றுள்ள நோயாளிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் தன்னார்வலர் சேவையை பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதி வழங்குகிறது.

“சுக்கா“ எனப்படும் சிலாங்கூர் மாநில தன்னார்வலர் அமைப்பின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படும் “பத்தாங் காலி கேர்“ எனும் இத்திட்டம் நேற்று முன்தினம் தொடக்கப்பட்டதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் முகமது ஷாபியி கூறினார்.

இந்த பரிவு சேவைத் திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த தன்னார்வலர்கள் நோயாளிகளை கோல குபு பாரு மருத்துவமனை, செயலாயாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர் என்று அவர் குறிப்பிட்டார்.

பத்தாங் காலி தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது. இந்த சேவையை வழஙகுவதன் மூலம் சம்பந்தப்பட்டத் தரப்பினர் முறையான மருத்துவ சேவையைப் பெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டயாசிலிசிஸ் நோயாளிகள் உள்பட 60 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை அடிக்கடி சென்று காண்பதை தாங்கள் வழக்கமாக்கிக் கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சேவையைப் பெற விரும்புவோர் 011-74742008 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனைக்குச் செல்வதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையின் முன்பதிவு கார்டின் நகல், பெயர், முகவரி மற்றும் அடையாளக் கார்டு எண் போன்ற விபரங்களை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :