ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பி.பி.வி. மையங்களுக்கு செல்ல வெ.20 கட்டணக் கழிவு- 100 இளையோர் பயன்பெற்றனர்

ஷா ஆலம், நவ 3- கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்காக கிராப் வாடகைக் கார் மூலம் தடுப்பூசி மையங்களுக்கு சென்று வருவதற்கு சிலாங்கூர் அரசு வழங்கும் 20 வெள்ளி கட்டணக் கழிவு சலுகையை நேற்று வரை 100க்கும் மேற்பட்ட இளையோர் பயன்படுத்தியுள்ளனர்.

மாநில அரசின் இந்த உதவித் திட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி தடுப்பூசி பெறவிருக்கும் இளையோர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கேட்டுக் கொண்டார்.

இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கி விட்டது. வாகன நெரிசல் மற்றும் பிறரை சார்ந்திருக்கும் போக்கை தவிர்ப்பதற்கு பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி மையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேடி அலைவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக அவர்கள் இந்த கட்டணக்கழிவுடன் கூடிய வாடகைக் கார் சேவையை பயன்படுத்தலாம் என்றார் அவர்.

இதனிடையே, மாநிலத்திலுள்ள ஆறு தடுப்பூசி மையங்களில் உள்ள பணியாளர்களுக்கு உணவை விநியோகிப்பதற்காக எம்.பி.ஐ. 71,175 வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 11 ஆம்  தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் 390 பணியாளர்கள் பயன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :