ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலாக்கா தேர்தலில் எந்த கட்சிக்கும் சாதகமான சூழல் இல்லை- ஆய்வாளர் கருத்து

ஷா ஆலம், நவ 12- இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில தேர்தலில் எந்த கட்சியும் நிறைவான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெறும் சூழலில் இல்லை என்று டாருள் ஏசான் கழகத்தின் (ஐ.டி.இ.) தலைமை செயல்முறை அதிகாரி பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் கூறினார்.

பிரசார கூட்டங்களை நடத்துவதற்கும் வாக்காளர்களை நேரில் சந்திப்பதற்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக இத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாது நிலையில் சிந்தனையாளர் அமைப்புகள் உள்ளதாக அவர் சொன்னார்.

எந்த கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்பதை இந்த வினாடி வரை கணிக்க முடியாத நிலை உள்ளது. வேட்பு  மனுத்தாக்கல் முடிந்து இரு வாரங்களுக்குப் பின்னர் எந்த கட்சி முன்னணியில் உள்ளது என்பதை கணிக்க முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

தேர்தலில் வெற்றி பெற முடியும் என எந்த கட்சியும் கூறிக் கொள்ளும் சூழல் இல்லை என்பதை தற்போதைய கள நிலவரங்கள் காட்டுகின்றன. தவிர, கட்டுப்பாடுகள் காரணமாக கட்சிகளின் வெற்றியை கணிக்கமுடியாத  சூழல்  நிலவுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

வேட்பு மனுத்தாக்கல் முடிந்த முதல் வாரத்தில் மலாக்கா வாக்காளர்கள் நிலைமை கண்காணித்து வருவர். இரண்டாம் வாரத்தில் அவர்கள் முடிவுக்கு வருவார்கள் என அவர் தெரிவித்தார்.

கடந்த திங்கள் கிழமைதான் வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ளது. அதற்குள் எந்த முடிவுக்கு வர முடியாது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு இந்த ஒரு வார காலம் மிக முக்கியமானதாக விளங்குகிறது என அவர் சொன்னார்.

இதர நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கி விட்டு தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதில் மக்களுக்கு அவ்வளவாக உடன்பாடில்லை என கருதுகிறேன். எனினும், இது குறித்து மக்கள் குரல் எழுப்பாமல் அமைதி காத்து வருகின்றனர் என்றார் அவர்.

 


Pengarang :