HEALTHMEDIA STATEMENTNATIONAL

நோய் தொற்று அறிகுறி உள்ள வாக்காளர்களுக்கு மை தடவ சிறப்புத் தூரிகை

ஜாசின், நவ15-  மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்களிப்பின் போது​​ நிலையான வழிகாட்டு நெறிமுறையின் (எஸ்.ஓ.பி.) ஒரு பகுதியாக நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ள வாக்காளர்களின் விரல்களில் மை தடவ சிறப்பு தூரிகை பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உடல் வெப்பநிலை, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட  வாக்காளர்களுக்கு இத்தகைய பிரத்தியேக பிரஷ் பயன்படுத்தப்படும் என்று அசஹான் தொகுதிக்கான தேர்தல் சிறப்பு அதிகாரி லுக்மானுல் ஹக்கிம் முகமது இட்ரிஸ் கூறினார்.

தேர்தல்  ஆணையம் வெளியிட்டுள்ள எஸ்.ஓ.பி. விதிமுறைப்படி  வாக்களித்ததற்கான அடையாளமாக வாக்காளர்களின் விரல்களை சிறப்பு மையில் நனைப்போம். மேலும், ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் கையுறைகள் மற்றும் முகக் கவசம் அணிந்திருப்பர் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், வாக்காளர்களுக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் சம்பந்தப்ட்ட நபர் ஒரு சிறப்பு கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூரிகையை பயன்படுத்தி வாக்காளர்களின் விரல்களில் மை பூசுவோம் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

வாக்குச் சீட்டுகள் சிறப்பு பிளாஸ்டிக்கில்சுற்றப்பட்டு வாக்குப்பெட்டியில் வைக்கப்படுவதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப்படும்  என்றார் அவர்.

சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் சிறப்பு கூடாரத்தில் உள்ள ஊழியர்கள் விஷேச பாதுகாப்பு ஆடைகளை  அணிவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, வாக்குச் சாவடியில் நெரிசலைத் தவிர்க்க குறிப்பிட்ட நேரத்தில் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களை அவர் அறிவுறுத்தினார்.

Pengarang :