ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

குற்றச்செயல் எண்ணிக்கை கடந்தாண்டு 21.4 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், நவ 26- நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 21.4 விழுக்காடு குறைந்து 65,623 ஆகப் பதிவானது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 83,456 ஆக இருந்தது.

இந்த குற்றச்செயல் எண்ணிக்கை குறைவுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கமும் ஒரு காரணமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

இந்த குற்றச்செயல்களில் பலாத்காரம் சம்பந்தப்பட்ட குற்றங்களும் சொத்துடைமை குற்றங்களும் அடங்கும் என அவர் கூறினார்.

கடந்தாண்டில் பலாத்காரம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் 19.5 விழுக்காடு குறைந்து 13,279 ஆக ஆன வேளையில்  சொத்துடைமை சம்பந்தப்பட்ட குற்றங்கள் 21.8 விழுக்காடு குறைந்து 52,344 ஆக ஆனது என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சமூக நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் மாநில, மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது ஆகியவை குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக விளங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமலாக்கத் துறைகளின் தீவிர அமலாக்க நடவடிக்கைகளும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்ததும் இந்த எண்ணிக்கை குறைவுக்கான இதர காரணரங்களாகும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

 


Pengarang :