ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பெருந்தொற்றுக்கு எதிரான சிலாங்கூரின் போராட்டத்திற்கு அடிமட்ட ஆதரவு பேருதவி

ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று உயர்ந்த எண்ணிக்கையை ஒரு கட்டத்தில் பதிவு செய்த போதிலும் அடிமட்ட நிலையிலான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு காரணமாக அந்நோய்த் தொற்றை மாநில அரசினால் கட்டுப்படுத்த முடிந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி கூறினார்.

மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் வெற்றியடைந்ததோடு நல்ல பலனையும் கொடுத்ததாக அவர் சொன்னார்.

கடந்த ஈராண்டு காலத்தில் நாம் கோவிட்-19 பெருந்தொற்றை சொந்த வழிமுறையைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம் என்றார் அவர்.

இது சாதாரண விஷயமல்ல. மற்ற மாநிலங்கள் தடுப்பூசிக்காக காத்திருந்த வேளையில் மாநில மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதற்காக நாம் சொந்தமாக தடுப்பூசி வாங்கினோம் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் கெஅடிலான் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்ற தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் கூறினார்.

இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் மாநில கெடிலான் கட்சியின் துணைத் தலைவர் ஹீ லோய் சியான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து கெஅடிலான் கட்சியின் கோட்டையாக விளங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து உறுப்பினர்களும் கட்சி போராட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான அமிருடின்  கேட்டுக் கொண்டார்.

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாம் தோல்வி கண்டால் மற்றவர்களைக் குறை கூறக்கூடாது என்றார் அவர்.


Pengarang :