ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

13 சமூக நல இல்லங்களுக்கு வெ. 65,000 மானியம்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், டிச 11- பதிமூன்று சமூக நல இல்லங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு 65,000 வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாக சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சையளிப்பது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காக அந்நிதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சமூக நல இல்லங்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் அந்த இல்லங்களில் தங்கியிருப்போரின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நிதி வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு  சமூக நல இல்லத்திற்கும் தலா 5,000 வெள்ளி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சமூக நல இல்லங்களுக்குச் சென்று அங்கு தங்கிருப்பவர்களை நேரில் சந்திக்கும் எங்களின் திட்டம் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக தடைபட்டுப் போனது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தகைய சமூக நல இல்லங்களுக்கு மாநில அரசு எப்போதும் உதவி வழங்கி வந்துள்ளது. இந்த உதவி சம்பந்தப்பட்ட இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமையகத்தில் நடைபெற்ற சமூக நல இல்லங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :