ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வேலை இழந்தவர்களுக்கு 63 கோடி வெள்ளி நிதியுதவி- சொக்சோ வழங்கியது

கோலாலம்பூர், டிச 14- ‘சிப்‘ எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறையின் கீழ் கடந்தாண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் இவ்வாண்டு நவம்பர் 5 ஆம் தேதி வரை 62 கோடியே 92 லட்சம் வெள்ளியை சமூக பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) வழங்கியுள்ளது.

இந்த நிதி மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டதாக மனிதவளத் துணையமைச்சர் டத்தோ அவாங் ஹஷிம் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

வேலை  தேடுவோருக்கான அலவன்ஸ் தொகையாக 58 கோடியே 85 லட்சம் வெள்ளியும் வருமான பாதிப்பு அலவன்சாக 69 லட்சம் வெள்ளியும் மறு தொடக்க வேலை அலவன்சாக 3 கோடியே 38 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இத்திட்டத்திற்கு கடந்தாண்டு மார்ச் 18 ஆம் தேதி முதல் இவ்வாண்டு நவம்பர் 5 ஆம் தேதி வரை 148,926 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற வேளையில் அவற்றில் 119,500 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று அவர் சொன்னார்.

‘சிப‘ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்பட்ட தொகை குறித்து கம்பார் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் சூ கியோங் சியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை 55,742 பேர் வேலை இழந்ததாகவும் அவர்களுக்கு அனுகூலத் தொகை வழங்குவதற்கு 32 கோடியே 46 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

MYFutureJobs  எனும் அகப்பக்கம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மீண்டும் வேலை கிடைத்து விட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :